FLASH NEWS: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15.11.2021 தேதி வரை நீட்டிப்பு -தமிழக அரசு அறிவிப்பு-முழு விவரங்கள்*
கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டிப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.658, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20.10.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 23-10-2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.